மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று (01) காலை முதல் 2 நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தாதிய உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும், அவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று காலை முதல் 2 நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அகில இலங்கை தாதியர் சங்கம் உள்ளிட்ட 3 சங்கங்கள் இணைந்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் கடமைக்குச் செல்லவில்லை.

தாதியர்களின் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

நோயாளர் விடுதிகளில் தாதியர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற கடமைகள் இடம் பெறவில்லை, வெளி நோயாளர் பிரிவில் தாதியர்களினால் முன்னெடுக்கும் பணிகள் இடம்பெறவில்லை. உயிர் காக்கும் நடவடிக்கைகள் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம் பெற்று வருகின்றது.

தாதிய உத்தியோகத்தர்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விட்டால் தமது போராட்டம் தொடரும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் எச்சரித்துள்ளனர்.

தமது 2 ஆவது நாள் சுகயீன விடுமுறை போராட்டம் நாளையும் (02) தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுகயீன விடுமுறை போராட்டத்தின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைகளுக்காக வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.