சமூக ஊடகங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு (2) கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சண்முகராசா விதுலஷன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் புகழ்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகளை பதிவு செய்தமையால் 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியான அவர் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான பதிவுகளை பதிவேற்றியதாகவும் இது பயங்கரவாத தடை சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைக்கான சர்வதேச சட்டம் என்பவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.