அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்து, இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.உதயரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

“இது சுயாதீன நீதிச் சேவையைக் கேள்விக்குள்ளாக்குகின்ற விடயமாகும். நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

“இலங்கையில் இறையாண்மைக்கு இந்தச் சம்பவம் ஒரு சவாலாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் ஊடகங்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு, எமது கருத்துச் சுதந்திரங்களும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

“மாணவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் குரல்கொடுத்து வந்திருக்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்தை நியாயப்படுத்தியே எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தார்.

“தற்போது ஜோன் கொத்தலாவல கல்வி நிலையத்தை, ஒரு தனியார் கல்வி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

“இலவசக் கல்வியை தொடர்ந்து கல்விக் கொள்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு, கல்வி அமைச்சருக்கு உள்ளது. அவரும் ஒரு  பேராசிரியர் என்ற அடிப்படையில் கல்வி, உயர்கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியவராவார். ஆனால், தற்போதைய விடயங்களில் அவர் மௌனமாக இருப்பதையிட்டு, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

“கல்விபுலத்தில் உள்ளவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடாவடித்தனங்களுக்கு நாங்கள் எதிர்க்கின்றோம்.

“இதற்காகவே, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் முன்னெடுத்துவந்த இணையவழி கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளோம். இது தொடர்பான தீர்மானத்தை, எமது மத்திய குழு எடுத்துள்ளது” என்றார்.