ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்
இணைய “சூம்” வழி மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிவரையில் நடைபெற்றது.
இதன்போது கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய குழப்பங்கள், அவற்றை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி மற்றும் ஏனைய கட்சிகள், அமைப்புகளுடனான சந்திப்புகளில் பங்குபற்றும் பிரதிநிதிகளை தெரிவு செய்வது என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பது தொடர்பாக பேசப்பட்டபோது, தற்போது இருக்கின்ற கொரோனா தாக்க சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மிகவும் எளிமையான முறையில் வீரமக்கள் தினத்தை அனுஷ்டிப்பது என தீர்மானிக்கப்பட்டது .
உமாமகேஸ்வரன் பவுண்டேசன், மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகளுக்கும் புளொட் அமைப்புக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என மீண்டும் வலியுறுத்தி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யில் பதவிகளில் இருப்பவர்கள் இவ்வாறான நிறுவனங்களில் அங்கம் வகிக்கக் கூடாது என்ற கருத்தை கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்வைத்தார்கள்.
இருந்தாலும் அடுத்த மகாநாட்டில் தான் அப்படியான ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என்று கூறப்பட்டு அந்த விடயத்தை அடுத்த மகாநாட்டிற்கு விடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த மத்திய குழு கூட்டம் இணைய சூம் வழியாக நடத்தப்பட்ட போதிலும் எண்பது வீதமான அங்கத்தவர்கள் கலந்து கொண்டது ஒரு நல்ல விடயமாக பார்க்கப்பட்டு தற்போதைய சூழ்நிலை தொடரும் பட்சத்தில் இணைய சூம் வழி ஊடாகவே
தொடர்ந்தும் கூட்டங்களை நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.