சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் எழுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி  வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ், சட்டத்தரணி தொழில்வாண்மையில் விசேட தர நிலைக்கு உயர்ந்துள்ள, தொழில் நடவடிக்கைகளில் நேர்மையாகவும் சிறப்பு வாய்ந்தவர்களுமான சட்டத்தரணிகளை, ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான மிலிந்த குணதிலக்க, ஹரிப்பிரியா ஜயசுந்தர, விக்கும் ஆப்ரூ, சானக்க விஜேசிங்க, ரவிந்திர பத்திரனகே, நெரின் புள்ளே மற்றும் சேத்திய குணசேகர ஆகியோர், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் விரைவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர் என்றும், இந்த நியமனங்கள் உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளன என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.