தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2021) வெள்ளிக்கிழமை மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடைபெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

32ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்ததோடு, நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி, மலர் அஞ்சலி என்பன இடம்பெற்று தலைவர் சித்தார்த்தன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

நிகழ்வில் கட்சியின் உபதலைவர்களுள் ஒருவரான ஜி.ரி. லிங்கநாதன்(விசு), கட்சியின் நிர்வாக செயலாளர் பற்றிக், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் கொன்சால்,

கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), த.யோகராஜா(யோகன்), குகதாசன் (குகன்), ரவி, சு.காண்டீபன், அ.கௌதமன், ரஞ்ஜன், ரவீந்திரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர்,

கட்சி உறுப்பினர்கள் இளங்கோ, சுமன், சிவா, ஓசை, பிரேம், மாறன், பார்த்தீபன், சந்திரன், ரூமி, மணி மற்றும் சுடர், கஜன் ஆகியோரும், கட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.