மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அத்தியாவசிய சேவைகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பொது போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் அனுமதி கிடைக்கும் வரை மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர கூறினார்.

பெலியத்த மற்றும் காலியிலிருந்தும், கண்டி, ரம்புக்கனை, மஹவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளிலிருந்தும் முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே மாகாணங்களுக்கிடையில் பயணிக்க வேண்டாம் என மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சபைகளுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்நாட்களில் கொழும்பு பஸ்டியன் மாவத்தையிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்தை மூடுவதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிரண்டா தெரிவித்துள்ளார்.