வவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கமும் சுகாதாரத்துறையும் பாராமுகமாக செயங்படுவதாக, வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனியாவில்  ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், இராணுவம் பொலிஸார் உட்பட பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

ஆயினும், முன்களப் பணியாளர்களாக செயற்பட்டு வருகின்ற எமது சுகாதார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், அண்மையில், இராணுவத்தால் ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், அதிலும் எமது ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் சாடினார்.

‘ஏற்கெனவே கடந்த மாதம் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு பணியாற்றும் 16 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. மீளவும் இவ்வாறு தொற்று ஏற்ப்படும் சந்தர்ப்பத்தில் அது பரவலடைந்து நகர் முழுவதும் பாரிய சமூகத் தொற்றாக மாறும் அபாயநிலை காணப்படுகின்றது’ என்றும், க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.