தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிக்கிழமை (17.07.2021) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்  சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்,  புளொட்  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோ.கருணாகரன், வினோநோகராதலிங்கம்,  ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்கே.சிவாஜிலிங்கம், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் தேசியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளை, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இணைத்து, கொள்கை அடிப்படையில் ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைத்து,   கட்சிகளுக்கிடையே நிரந்தரமான ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியான நடவடிக்கையாக இந்த சந்திப்பு இடம்பெறுவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

சம காலத்தில் தமிழ் மக்களைப் பாதிக்கின்ற விடயங்கள் மற்றும் தமிழ் மக்களின் அத்தியாவசியமான  பிரச்சினைகள் யாவற்றையும் பட்டியலிட்டு முதலில் அறிக்கையாக்கிக் கொள்வோம் எனவும்,

அவ் அறிக்கையின் பிரதிகளை,  கூட்டத்திற்கு வருகை தந்திருக்கின்ற அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்து, சம்பந்தப்பட்ட கட்சிகள் அதனை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கு முன்வருவார்களேயானால் தொடர்ந்து கலந்துரையாடலை மேற்கொள்ளலாம் எனவும்,

பின்னர், தொடர்ச்சியாக, தமிழ் தேசியப் பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் பேசலாம்  எனவும் தமது நிலைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய தரப்பினரும் சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தனர்.