முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன் (31) பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்.

குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றிய போது திருமணம் செய்துள்ளனர்.

குறித்த இருவரும் திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் அருகிலே சென்று மனைவியும் மகனும் உப்பு அள்ளிக் கொண்டிருந்த போது கணவன் அருகில் உள்ள பற்றைக்காடுகளில் விறகு வெட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் காலை எட்டு முப்பது மணி அளவில் குறித்த குடும்பஸ்தர் விறகு வெட்டியபோது மரத்தடியில் இருந்த வெடிபொருள் மீது கோடாரி மோதி குண்டு வெடித்துள்ளது.

இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் அறிந்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று குறித்த பகுதியை பாதுகாப்பற்ற பகுதியாக அடையாளப்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் தீடிரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய நடராசா சிவராசா என்பவரே சைக்கிளில் பயணிக்கும்போது திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (26) இரவு குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவரின் உடலானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் PCR பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.