உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, அரசாங்க அலுவலர்களான உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு, இதுவரையில் வழங்கப்பட்டுவந்த மாதாந்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் அக்கூட்டங்களுடன் இணைந்த வகையிலான பணிகளில் ஈடுபடுவதற்குமாக, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், பொதுசேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி சகல திணைக்களத் தலைவர்களுக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை  அனுப்பி வைத்துள்ளார்.

புதிய சுற்றறிக்கையின்படி  அரசாங்க உத்தியோகத்தராக இருக்கும் உள்ளூராட்சி சபையொன்றின் தலைவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்துடனான மாதாந்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை  07 முதல் 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்க உத்தியோகத்தராக இருக்கும் உள்ளூராட்சி சபையொன்றின் உப தலைவர் அல்லது உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளத்துடனான மாதாந்த விடுமுறை நாட்கள் 5 முதல் 06 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்தத் தீர்மானம் மே 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.