உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமற்போனமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன் பிணையை வழங்க, கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தையும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாமல் பலல்லே, ஆதித்ய படபெத்திகே மற்றும் மொஹமட் இஷர்தீன் ஆகிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகளிடம் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து, முன்னர் பதிவாகியிருக்கக்கூடிய குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கையையும் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் காணப்படும் விடயங்களை மீள பரிசீலித்து, உரிய குற்றப்பத்திரத்தை அடுத்த வழக்கு தவணையின் போது மன்றுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக , சட்டமா அதிபர் சார்பில் வழக்கை வழிநடத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத்துறை ஊடாக தகவல் கிடைத்தும், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையால், கடமையை மீறியமை உள்ளிட்ட 864 குற்றச்சாட்டுகளுடன், பிரதிவாதிகள் சார்பில் இரண்டு வழக்குகள் சட்டமா அதிபரால் விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.