திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் 50 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு, அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளருமான ஆ.யதீந்திரா அவர்களால் (11.08.2021) இன்று உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திரு. யதீந்திரா அவர்கள், கழகத்திடம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் கனடா கிளைத் தோழர்கள் அனுப்பி வைத்திருந்த நிதியிலிருந்து குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் ஆய்வு பணிகளுக்கு அப்பால் திருகோணமலையில் நலிவுற்ற மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை முடிந்தவரையில் பூர்த்தி செய்வதிலும் யதீந்திரா அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வெளிநாட்டுக் கிளைகள் கழக நிர்வாகத்தினூடாக மட்டுமல்லாது, தாயகப் பிரதேசத்திலிருந்து சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்படும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தம்மால் முடிந்தளவு நிதியுதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.