ஆட் பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உட்பட அனைத்து பொது மக்களுக்கான சேவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மற்றும் சகல மாகாண காரியாலயங்களை பொதுமக்களுக்காக திறக்கப்படாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள பிரதேச காரியாலயங்களினூடாக செயற்படுத்தப்படவுள்ளது.

தற்போது வரை ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெற திகதி மற்றும் நேரத்தினை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை தாமதமின்றி கிராம அலுவலரிடம் அல்லது பிரதேச செயலகங்களிலுள்ள அடையாள அட்டை பிரிவுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பப்படிவத்துக்கான ஒருநாள் சேவைக் கட்டணம் அறவிடப்படாது  என்றும் தேசிய அடையாள அட்டை துரிதமாக தயாரிக்கப்பட்டு பதிவுத்தபால் மூலம் உரிய விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பரீட்சை நடவடிக்கை, நேர்முகத்தேர்வு மற்றும் கடவுச்சீட்டு போன்ற அவசர மற்றும் அத்தியாவசிய விடயங்களுக்காக தேசிய அடையாள அட்டையினை துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு தேவையான விண்ணப்பதாரர்கள்  கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தவிர தேசிய அடைbயாள அட்டை வழங்குவது உட்பட பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஏனைய சேவைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைபேசி இலக்கங்கள் : 0115226 126 / 0115 226 115 / 0115 226 100 / 0115 226 150