திருகோணமலை மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப்  பரவலானது சடுதியாக அதிகரித்திருப்பதைக்  கருத்தில் கொண்டு இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று  (17) திருகோணமலை நகர சபையில் இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய, இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்குத்  தீர்மானித்திருப்பதாகத் திருகோணமலை நகரசபைத்  தலைவர் என்.ராஜநாயகம் தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளைப்  பூர்த்திசெய்யும் முகமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சிறுகடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனவும், நடமாடும் சேவைகள் மூலம் மீன் மற்றும் மரக்கறி வகைகளை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ‘பட்டணமும் சூழலும்‘ பிரதேசசபை தலைவர் சதுன் தர்ஷன ரத்னாயக்க, திருகோணமலை வர்த்தக சம்மேளனத் தலைவர் கே.குலதீபன் மற்றும் ஷிரோமன் ரங்கன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.