இந்தியாவில் இருந்து ஒக்சிஜனை ஏற்றிய இலங்கை மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளன.
கடந்த 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சக்தி கப்பல், இன்று (20) அதிகாலை சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி எனும் மற்றுமொரு கப்பல், விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து நேற்றிரவு (19) நாட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த கப்பல்கள் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
இந்திய அரசாங்கத்திடம் முன்பதிவு செய்துள்ள ஒக்சிஜனை விரைவில் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கடற்படைத் தளபதி, இந்திய கடற்படைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் ஒக்சிஜனை ஏற்றி இலங்கைக்கு வருகை தருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தேவைக்கேற்ப இந்த சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு 100 தொன் ஒக்சிஜன் நாட்டிற்கு கொண்டுவரப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது