தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்கான
முயற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் இணைய சூம் வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசியல் யாப்பில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த கோருதல் உள்ளிட்ட விடயங்களில் காத்திரமாக ஒருமித்துச் செயலாற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்களை தமிழ் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் யாவும் ஏற்கனவே தனித்தனியாக வலியுறுத்தி வந்தாலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவராலும் இவ்விடயங்களை ஒற்றுமையாக வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.