சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் மறைவு விடுதலைக்காக பயணிக்கும் தமிழ் சமூகத்திற்கு மற்றுமொரு பேரிழப்பாகும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் மறைவை அடுத்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் திடீர் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கௌரிசங்கரி தவராசா விசேடமாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர், யுவதிகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்திருந்ததோடு, அவர்களின் விடுதலைக்காக பல வழக்குகளில் ஆஜராகியும் உள்ளார்.

அதுமட்டுமன்றி, ஜனநாயகம், மனித உரிமைகள், பெண்கள், சிறுவர் உரிமைகள் ஆகியவற்றுக்காக பல தருணங்களில் முன்னின்று போராடியுள்ளதோடு தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் வந்திருந்தார்.

இனவிடுதலையை நோக்கி பயணிக்கும் தமிழ் சமூகத்திற்கு நேரடியாகவும், திரைமறைவிலும் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் பாரியளவு பங்களிப்பினைச் செய்து வந்தும் இருந்தார்.

அவ்விதமான ஒருவரின் மறைவு தமிழினத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயர் உற்றுள்ள அவரது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் உற்றார் உறவிர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரினதும் துயரத்தில் பங்கெடுப்பதோடு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றுள்ளது.