நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரித்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளின் தார்மீக நியாயத்தை புரிந்து கொண்டு செயற்பட்ட மங்கள சமரவீர போன்ற தென்னிலங்கை தலைவர்களின் இழப்பு, தமிழ் மக்களிற்கும் பேரிழப்பே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானதை முன்னிட்டு, அவர் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பில் இதனைதெரிவித்துள்ளார்.

அவரது அஞ்சலிக் குறிப்பில்-

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென உண்மையாக செயற்பட்ட சிங்கள தலைவர்களில் மங்கள முதன்மையானவர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு முயற்சியை, சிங்கள மக்களையும் ஏற்க வைக்க வேண்டுமென்பதற்காக மங்கள சமரவீர தீவிரமாக உழைத்தவர்.

இதற்காக, வெள்ளைத் தாமரை இயக்கத்தின் ஊடாக தென்னிலங்கை பகுதிகளின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாட்டின் பன்மைத்துவம் தொடர்பாக தீவிர நிலைப்பாடுடைய சிங்கள தலைவர்களின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து, தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு சாதகமாக செயற்பட்டவர்.

கடந்த அரசாங்கத்தில் மங்கள நிதியமைச்சராக செயற்பட்ட போது, கம்பெரலிய திட்டத்தின் மூலம் வடக்கு கிழக்கிற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. மங்கள நிதி அமைச்சராக செயற்பட்ட போது, 2018ஆம் ஆண்டில் 7,000 மில்லியன் ரூபா யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதி இதுதான்.

நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரித்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளின் நியாயத்தன்மையை புரிந்து கொண்ட அரசியல் தலைவர்களின் இழப்பு- அனைத்து இனங்களின் அரசியல் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்டு, இனங்களிற்குள் சகவாழ்வு ஏற்படுத்தப்பட்ட- புதிய இலங்கையை நோக்கிய பயணத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும். மங்களவின் இழப்பு தமிழ் மக்களிற்கும் பேரிழப்பே என தெரிவித்துள்ளார்.