ஏதிலிகளாக அடைக்கலம் தேடிச் சென்று தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கான  பல்வேறு திட்டங்களை நேற்று  தமிழக முதல்வர்  மு.க .ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்துள்ளமை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்  (புளொட்) தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில்,  அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும்  வாழும் எங்களுடைய மக்களின் வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்யவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் என மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென தமிழக முதல்வர் அறிவித்தமைக்கு மனமார்ந்த நன்றியினை கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

அங்கு அகதிகளாக வாழுகின்ற எங்களுடைய மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு  இவ்வாறு பெருந்தொகை  பணத்தை ஒரே தடவையில் ஒதுக்கி,   வேறு எவருமே செய்யாத அளவுக்கு,  அவர்களுடைய வாழ்வை மேம்படுத்துவதில் முதல்வர் காட்டுகின்ற அக்கறை எம்மை  மனம் நெகிழ வைத்துள்ளது.

கடந்த காலங்களிலும் பல உதவிகளை முதல்வர் செய்திருக்கின்றார்.  அதே போல் தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கின்றது.  முதல்வரது இந்த செயற்பாடு  தமிழகத்  தமிழர்களில் மாத்திரமல்ல உலகத்தில் வாழுகின்ற அனைத்து தமிழ் மக்கள் மீதும் உங்களுக்குள்ள கரிசனையை மிகத் தெளிவாக காட்டுகின்றது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

28.08.2021.