வவுனியா மாவட்டத்தில், கடந்த இரு வாரங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களும் அதனூடாக ஏற்படும் மரணங்களும், தமது மாவட்டத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதை வெளிகாட்டுகிறது என, வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில், கொரோனா தொற்றாளர்களின் நிலைமைகள் தொடர்பில், அவரிடம் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்,

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  வவுனியா வைத்தியசாலையில். கடந்த இரண்டு வாரங்களில், கொரோனா தொற்றாளர்களாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்கு முந்திய இரு வாரங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த இரு வாரங்களில் தொற்றாளர்கள், ஒட்சிசன் தேவையுடையோர் மற்றும் மரணங்கள் இருமடங்கை விட அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது தமது மாவட்டம் மிக ஆபத்தான பிரதேசமாக மாறி வருவதனை சுட்டிக்காட்டுகின்றது எனவும் கூறினார்.

‘ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 2,500 வரையிலான தொற்றாளர்களும் 42 மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கொரொனா தொற்று ஆரம்பித்த காலம் தொடக்கம் கடந்த ஜுன் மாதம் தொடக்கம் வரையான ஒன்றரை வருட காலத்தில் 900க்கும் குறைவான தொற்றாளர்களும் 13 மரணங்களுமே பதிவுசெய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போதைய தொற்றுநிலையின் வீரியத்தையும், மாவட்ட மக்களின் அதியுச்ச பங்களிப்பின் அவசியத்தன்மையையும் தெளிவாக வேண்டிநிற்கின்றது’ என்றும், ராகுலன் தெரிவித்தார்.