ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48 வது கூட்டத்தொடரில் இலங்கையின் மீதான ஐ.நாவின் 48/1 தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து, மனித உரிமை ஆணையாளருக்கு ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சம்பந்தமாக, கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டுக் கழகக் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் விளக்கமளிக்கும் மெய்நிகர் சந்திப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியை விடுத்து கூட்டமைப்புக்கு வெளியே உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து கடிதத்தை அனுப்பவேண்டிவந்த சூழ்நிலைகள் பற்றியும் அதற்குக் காரணமாக அமைந்த தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் பற்றியும் இச் சந்திப்பில் தலைவர் த. சித்தார்த்தன் அவர்கள் விளக்கமளித்திருந்தார். அத்துடன் இதனால் தமிழ் தேசிய கூட்டமைபிற்குள் பிளவு என தவறான கருத்துகள் ஒருசில ஊடகங்களிலும் முகப்புத்தகங்களிலும் வெளியானபோதும் அவ்வாறு எந்த பிளவுகளும் இல்லையெனவும், இதற்கு முன்னரும் பல தடவைகள் தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளுடன் இணைந்து கடிதங்கள் அனுப்பப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டென்பதையும் சுட்டிக்காட்டினார்.