வவுனியா மாவட்டத்தில் 139 பேர் கொவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளதுடன், 6,780 பேர் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் கொவிட் நிலைமைகள் தொடர்பான கலந்துலையாடல் ஒன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்றது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், இராணுவ அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அபிவிருக்குழு தலைவரின் செயலாளர் டினேஸ், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மாவட்ட விவசாய சம்மேளன பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட கொவிட் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்டத்தின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தற்போதைய நிலவரத்தின் படி எமது மாவட்டத்தில் 6,780 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரைக்கும் 139 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். 973 கொவிட் தொற்றாளர்கள் கொவிட் நிலையங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். வீடுகளில் 1,194 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 49 கொவிட் தொற்றாளர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுனள்ளனர்.

இந்த நிலையில் மாவட்டத்தின் கொவிட் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக துரித செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.