யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில், நேற்று (18) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த துரைராசா செல்வராசா (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் குறித்த நபர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணை, திருமணம் முடித்து, பூம்புகாரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், குறித்த நபருக்கும் அரவது மனைவிக்கும் இடையில் நீண்ட நாள்களாக நீடித்து வந்த குடும்ப முரண்பாடு முற்றியதில், நேற்று இரவு, மனைவியால் அவர் திருவலைக் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று, ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இன்று (19) அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணைக் கைதுசெய்தனர்.

திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில் 5க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.