​அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வுப்பெற்ற நீதிபதியை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி,

 வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது, அந்த சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அது ஒரு அவமானம் என்றார்

அதேபோல, மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்றார்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபை ஆகிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபை, கைதிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் நீதியமைச்சர் தெரிவித்தார்.