வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால்  வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தெரிவு அமர்வு, இன்று (22) முற்பகல் 10 மணிக்கு, நகர சபை மண்டபத்தில், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய அமர்வு கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது.

இதன்போது, தவிசாளர் தெரிவுக்குப் போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட டெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பான உப தவிசாளர், சுயேட்சைக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தார்.

வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை நகர சபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஓர் உறுப்பினர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.