தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வௌிப்படுத்த செய்யும் பொது முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை தௌிவுபடுத்தும் வகையில், திருகோணமலை தென்கயிலை ஆதீன குரு மகா சந்நிதானமும் திருகோணமலை மறைமாவட்ட ஆயரும் கூட்டறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத் தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விரும்புவதாக தென்கயிலை ஆதீனத்தின் முதலாவது குருமகா சந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கி.நொயல் இம்மானுவேல் ஆண்டகை ஆகியோரது கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் எழும்போது, அவற்றை தீர்த்துவைக்கவென புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதற்கு பதிலாக, ஒரு பொதுவான மாற்றீட்டு அணுகுமுறையை செயற்படுத்துவதே பொருத்தமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதற்கட்டமாக பல மட்டங்களில் இருந்தும் கருத்துக்களை பெற்று அவற்றை பரிசீலித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஆவன செய்வதற்காக அரசியல் பின்னணி இல்லாத ஐவர் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் கல்வி மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் தென்கயிலை ஆதீன குரு மகா சந்நிதானமும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.