தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு மகத்தான சாதனை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமானால், தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும்  மற்றும் சமுதாயத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருகின்ற தற்போதைய வேகத்தை பராமரிப்பது  மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனால், இந்த நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு வரும் வகையில், வரவிருக்கும் சில வாரங்களில் பொறுப்புடன் இருக்குமாறு மக்களுக்கு இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், நடைமுறையில் உள்ள முடக்கம் சரியாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் நாடு அதிக நன்மைகளைப் பெற்றிருக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.