தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்கக்கூடாதென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை கவனத்தில் எடுக்கும்படி கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது.

ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையை இலங்கைக்கு நீடிப்பது தொடர்பாக, இலங்கையின் தரநிலையை பரிசீலனை செய்ய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வந்துள்ளது.

கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டமைப்பின் சார்பில்,

தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கும், குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும் அரசாங்கங்கள் அனைத்தும் செயற்பட்டாலும், இந்த அரசாங்கம் அதில் மிக வேகமாக செயற்பட்டு வருகிறது.

தொல்லியல் திணைக்களத்தின் மூலம் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தினால் காணிகளை இழந்த மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரவை தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதை நம்பி வாழ்ந்த பண்ணையாளர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமென நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் கேட்கிறது. எனினும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாட்டாக வைத்து அதை நீடிக்க அரசு முயல்கிறது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த சம்பவம், நடப்பு சூழலை தெளிவாக பிரதிபலிக்கிறது. தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். பல தசாப்தங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கல் நிர்வாக அதிகாரிகளாக சிங்களவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அனைத்து வழிகளிலும் சிங்கள மயமாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பான எந்தவொரு பேச்சுக்கும் அரசு தயாராக இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையை பெறுவதற்கான தரநிலைகள் பலதை இலங்கை பூர்த்தி செய்யவில்லை. இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதெனில், அந்த தரநிலை முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இலங்கையின் தரநிலை மேம்படாத நிலையில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்கக்கூடாதென ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதை நீங்கள் மிக தீவிரமாக கணக்கிலெடுக்க வேண்டும்.

இந்த தரநிலைகளை இலங்கை பூர்த்தி செய்யாமல், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கப்பட்டால், அது சிறுபான்மையினரை ஒடுக்கும் அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாது என நீண்ட விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விவகாரங்களில் குறுகிய கால தீர்வு எதையாவது யோசிக்கலாமா என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்ட போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை ஏற்கவில்லை. நீடித்த, நிலையான தீர்வே தமிழ் தரப்பினால் ஆராயப்படும், அதுவே தேவையானது என தெரிவித்தனர்.

இந்த விவகாரங்களில் தமக்கும் வரையறைகள் உள்ளன. நாளை அரசாங்கத்துடன் நடக்கும் மீளாய்வு கூட்டத்தில் இந்த விவகாரங்களை ஆராய்வதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் நடக்கும் காணி அபகரிப்பு, சிங்கள மயமாக்கல், தொல்லியல் திணைக்களம் ஊடாக ஆக்கிரமிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெளிவான தகவல்களையும், ஆவணங்களையும் பெற்றிருந்தனர். கூட்டமைப்பினருடனான சந்திப்பில், கூட்டமைப்பினர் இந்த விவகாரங்களை விளக்கிய போது, அவை தொடர்பான ஆவணங்களுடன் தமக்கு தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர்.