இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான  சந்திப்பு இன்றுமாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர்  செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

இந்திய தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை  தேர்தலை விரைவாக  நடத்துவதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.  வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன தொடர்பில் வலியுறுத்திய கூட்டமைப்பினர்,  அரசின் மாகாண அதிகாரங்களை பறிக்கும் செயற்பாடுகள்,  மாகாண சபை தேர்தலை நடத்தாது காரணங்கள் கூறி இழுத்தடித்து  வருகின்றமை என்பவை தொடர்பிலும் எடுத்து கூறினார்கள்.

இதன் போது, இவற்றை நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ் தரப்பு உரிய முறையில் வலியுறுத்த வேண்டும். உங்கள் அழுத்தங்கள் போதாது. தமிழ் கட்சிகள் எல்லாம் அழுத்திக் கேட்க வேண்டும். அப்போது தான் நாங்களும் அரசுக்கு அழுத்தமாக சொல்லக்கூடியதாக இருக்கும்.  அத்துடன் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியிலும் நாம்  கூடுதல் கவனமெடுத்துள்ளோம் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் தெரிவித்துள்ளார்.