சர்ச்சைக்குரிய பென்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன்,  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு நாளை மறுதினம் (08) அழைக்கப்பட்டுள்ளார்.

பென்டோரா பேப்பர்ஸ் மூலம் இலங்கை பற்றி கசிந்த தகவல் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவை அடுத்தே  திருக்குமார் நடேசனை ஆணைக்குழுவுக்கு வரவழைக்க இன்று காலை முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

பென்டோரா பேப்பர்ஸ் சம்பவம் தொடர்பாக தனது மற்றும் மனைவியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆராய ஒரு சுயாதீன ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்றும் திருக்குமார் நடேசன், ஜனாதிபதிக்கு இன்று (06) ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.