நாடளாவிய  ரீதியிலுள்ள 312 கோட்டக்கல்வி பணிமனைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. ஆசிரியர் தினம் இன்று (06) கொண்டாடப்படுகின்ற நிலையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

24 வருடங்களாக தீர்க்கப்படாமல் உள்ள ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்த்து வைக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ். வலிகாமம் வலயக்கல்வி பணிமனை அமைந்துள்ள மருதனார்மடத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வை வலியுறுத்தி வவுனியாவிலும் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வடக்கு வலய ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு மருக்காரம்பளை பகுதியில் உள்ள கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், 10 மணியளவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முன்பாக ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஆசிரியர் அதிபர் சங்கங்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று காலை 10 மணியளவில் நீர்கொழும்பிலும் இடம்பெற்றது. பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மன்னார் மாவட்ட அதிபர் ஆசிரியர்கள் மடு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

பண்டாரவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் பண்டாரவளை பஸ் நிலையத்திற்கு அருகே இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிபர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.