தேர்தல் முறை தற்போது பேசப்படும் ஒரு தலைப்பு. மாகாண சபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ளது. மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டன. அதற்காக விகிதாசார முறையை மாற்றி கலப்பு முறையில் தேர்தல் நடத்த முடியாது. கலப்பு முறைக்கு போனால், எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இது நீண்ட காலம் எடுக்கும் பணியாகும்.

இந்த கால தாமதத்துக்கு முகம் கொடுக்க முடியாததாலேயே, இப்போது பழைய முறையில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற உடன்பாடு அரசு -எதிரணி மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது இடைகால உடன்பாடாகும். எனவே தேர்தல் முறைமை சீர்திருத்த பணிகள் தொடரும். அடுத்த தெரிவுக்குழு கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தேர்தல் முறை தற்போது பேசப்படும் ஒரு தலைப்பு. மாகாண சபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ளது. இப்போது தேர்தல் முறையை மாற்ற போனால் பெரும் தாமதம் ஏற்படும். இதில் நாம் உறுதியாக இருந்தோம். ஆகவே, தெரிவுக்குழுவில், அரசு-எதிரணி மத்தியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணம் அரசாங்கத்தின் மீதான உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்கள் ஆகும். ஆகவே இது இடைகால உடன்பாடுதான். ஆகவே தேர்தல் உள்ளூராட்சி, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் முறைமைகள் பற்றிய அவதானம் தொடர்ந்து தேவை.

“விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறையே வேண்டும்” என தெரிவுக்குழுவில் பெரும்பான்மை, குறிப்பாக அரசாங்க கட்சி அரசியல்வாதிகள் கூப்பாடு போட்டார்கள். அது இந்நாட்டில் சிதறி வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்களை அபாயத்துக்குள் தள்ளும் நோக்கத்தை கொண்டதால், நாம் இந்நிலைப்பாட்டை எதிர்த்தோம்.

விகிதாசார முறைமை மாற்றப்படக்கூடாது என்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவீபி) உட்பட்ட பெரும்பான்மை கட்சிகளும் ஆதரவளித்தார்கள்.

அதேவேளை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறிலங்கா சுதந்திர கட்சி உட்பட்ட பல கட்சிகளின் தலைவர்களுடனும் நான் இது தொடர்பில் பேச்சுகள் நடத்தி இருந்தேன். அவர்களும் அரசாங்கத்துக்கு உள்ளே அழுத்தங்களை பிரயோகித்தார்கள்.

பாராளுமன்றமும், மாகாண சபைகளும் தேசிய, மாகாண சட்டமூலங்களை விவாதிக்கும் நிறுவனங்களாகும். ஆகவே இங்கே உள்ளூர் தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் அவசியம் கிடையாது.

ஆனால், நீர், மின்சாரம், வீதிகள் உட்பட மக்களின் நாளாந்த விவகாரங்களை கையாளும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வட்டார உறுப்பினர்களாக இருக்கலாம். உள்ளூராட்சி மன்றங்களில், அவ்வந்த மன்றங்களின் வட்டாரங்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய உறுப்பினர்களுக்கான அவசியம் இருக்கின்றது.

ஆகவே பாராளுமன்றம், மாகாண சபைகளுக்கு தொகுதி முறை தேவையில்லை என நாம் கூறினோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொகுதி (வட்டார) உறுப்பினர்கள் இருக்கலாம் எனவும் நாம் கூறினோம்.

அதேபோல்தான், விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர், அந்த கட்சி தலைமை முன் நிறுத்தும் வேட்பாளருக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து, விருப்பு வாக்கு மூலம் தப்புகிறார்.

கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை தனக்கு பிடித்த வேட்பாளரை தெரிவு செய்ய ஒவ்வொரு வாக்காளருக்கும் “ஜனநாயக சுதந்திரத்தை”, விருப்பு வாக்கு வழங்குகிறது. இதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

“விருப்பு வாக்கு வேண்டாம்”, “விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்கள் பெரும்பான்மை இன பெரிய கட்சிகளின் கோஷங்கள்தான். அதேவேளை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூட, இவை பற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்களை ஆங்காங்கே எழுப்பினார்கள். இது முதிர்ச்சியற்ற பிழையாகும். தேர்தல் முறை விவாதம் தொடரும். இவை பற்றிய அவதானத்துடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் செயற்பட வேண்டும்.