தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

‘தெய்வீகன், அப்பன் போன்றோர் நேரடியாக காட்டிக்கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது தொடர்பில் நான் தற்போது கூற விரும்பவில்லை’ எனவும் அவர் கூறினார்.

யாழில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால், தான் உள்ளிட்டவர்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என பொது வெளியில் பேசப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிடம் தெரிவித்ததாகவும், கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்கும் விதமாக சிறிதரன் உள்ளிட்டவர்கள் கூறிவரும் கருத்துக்கள் உள்ளிட்டவை தொடர்பில் விசாரிப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் இரா.சம்பந்தன் கூறியிருக்கின்றார் எனவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தாங்கள் ஏதோ காட்டிக்கொடுத்தோம், துரோகம் செய்தோம் என்ற ரீதியிலே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், சுமந்திரனுடன் தாங்கள் பேசி, சில விடயங்களை சுமூகமாக தீர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், சிறீதரனை பொறுத்தவரை, அவர் இதனை அடிக்கடி கூறுவார் எனவும் அதேபோல தேர்தல் காலத்தில் மிகவும் கூடுதலாக கூறுவார் எனவும் சுட்டிக்காட்டினார்.

‘ஆனால், நெடுங்கேணியில் வைத்து, அப்பன், தெய்வீகன் என்ற இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை யார் காட்டிக் கொடுத்தார்கள், எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள், ஏன் காட்டிக்கொடுத்தார்கள் என்பதனை பகிரங்கமாக நான் கூறினால், அது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நல்லதல்ல, தமிழரசுக் கட்சிக்கும் நல்லதல்ல. அடுத்ததாக அது நிச்சயமாக மக்களுக்கும் நல்லதல்ல. அத்துடன், இவ்வாறான விடயங்கள் 2009க்குப் பின்னர் கூட தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும் நல்லதல்ல’ எனவும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறு ஆயுத குழுக்களுக்கும் இடையில் ஆயுத வழியில் போராட்டங்கள் இடம்பெற்றமை மக்கள் அனைவரும் அறிந்த விடயமே. அப்போது பரஸ்பரம் மோதல்கள் நடந்தன. பின்னர் எங்களுக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டது. அது காட்டிக் கொடுப்பல்ல எனவும் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகுவதற்கான தகுதி தனக்கிருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்து தொடர்பில் வினவப்பட்ட போது, “அதை தமிழ் அரசு கட்சி தீர்மானிக்க வேண்டும். பின்னர் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகள் தீர்மானிக்க வேண்டும். பின்னர் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் அரசியலுக்கு வரும் அனைவருமே அடுத்த கட்டத்தை எதிர்நோக்கித்தான் வருவார்கள். அதனால் சுமந்திரன் அப்படி எதிர்பார்ப்பதில் தவறில்லை. அவரைப் போல இன்னும் பலரும் எதிர்பார்த்திருப்பார்கள். தகுதியுடன் இருப்பார்கள்.

ஆனால், இதெல்லாவற்றையும் விட முக்கியமானது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது தொடர்ந்து செயற்பட்டு வருகிறார். அதனால் இப்போது இப்படியான பேச்சுக்களிற்கு அவசியமில்லை“ என்றார்.