தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty), இன்று (18) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

எகிப்து நாட்டுச் சிவில் அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளராகப் புதிதாக நியமனம் பெற்றுள்ள அவர், இலங்கையுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்வதன் அவசியம் தொடர்பிலும், ஹுஸைன் தொடர்ந்து எடுத்துரைத்தார்.

இலங்கைக்கான எகிப்து தூதுவராக ஹுஸைன் இந்நாட்டுக்குப்பெற்றுக்கொடுத்த சேவையை, ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே மற்றும் எகிப்து தூதரகத்தின் ஆலோசகர் கரீம் அபுலெனயின்(Karim Abulenein) ஆகியோரும், இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.