ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் வேறு சில தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சேலினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவுக்கு, நேற்று (27)  அறிவித்தனர்.

மேலும், இந்த முறைப்பாடு தொடர்பிலான இரகசிய அறிக்கை ஒன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சீ.ஐ.டி), நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். கடந்த 23 ஆம் திகதியன்று சூம் தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச சமூக மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்ட சில தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, சலே தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக சீ.ஐடி, மன்றுக்கு அறிவித்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சீ.ஐ.டியினருக்கு நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சஞ்சய கமகே, நேற்று (27) கட்டளை பிறப்பித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்பிலிருந்து தவறி மனித படுகொலை இடம்பெற உடந்தையாக இருந்ததாகவே இருவர் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருப்பதால், அவர்களுக்கு எதிராக நீதவான் நீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கைவிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பதில் நீதவான், மேற்குறிப்பிட்ட உத்தரவைப்
பிறப்பித்துள்ளார்.