நீதி தீர்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டு, “ஒரே நாடு- ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான இந்த செயலணி 13 உறுப்பினர்களை கொண்டது. அதில், ஞானசார தேரர் உள்ளிட்ட ஒன்பது பேர் சிங்களவர்கள் ஆவர். ஏனைய நால்வரும் முஸ்லிம்கள் ஆவர்.

இனம், மதம், குலம் அல்லது வேறேதேனும் காரணியொன்றின் பேரில் எந்தவொரு நபரும் சட்டத்தின் பாகுபாட்டுக்கு அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக்கூடாது என்பதன் அடிப்படை உரிமையின் கீழ் இந்த ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நேற்றுமுன்தினம் (26) திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், “ஒரே நாடு- ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியில்
தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரே நாடு- ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவைச் செயற்படுத்துவதலானது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்​கொள்ளப்பட்ட மனித விழுமியங்களை அடையும் திறமுறையாகத் தென்படுவதாலும், அதனைத்துப் பிர​சைகளும் சட்டத்தின்முன் சமமானவர்கள் எனக் கருதப்படுவதை மேலும் உறுதிப்படுது்த வேண்டியதாலும் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தலைமையிலான அந்த ஜனாதிபதி செயலணியில், பேராசிரியர்களான தயானந்த பண்டார, சாந்திநந்தன் விஜேசிங்க, சுமேத சிறிவர்தன ஆகியோரும் ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணிகளான இரேஷ் செனவிரத்ன, சஞ்ஜய மாரம்பே ஆகி​யோரும், ஏரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹமட் ( காலி உலமாக சபை), மொஹமட் இந்திகாப் (விரிவுரையாளர்) கலீல் ரஹூமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோரும் அடங்குகின்றனர்.

இலங்கையினுள் ஒரே நாடு- ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல், நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் உரிய வரைவில் உள்ளடக்குதலும் இக்குழுவினரின்
பணியாகும்.

இச்செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செயலணி, மாதத்துக்கு ஒருமுறை அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

அத்துடன் இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியன்று
கையளிக்கவேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார்.