முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று (28) காலை 10.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1696 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

இந்நிலையில் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் இன்று வரை எந்த தீர்வுகளும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், சர்வதேச சமூகமே தமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பிள்ளைகளை தேடி தேடி பெற்றோர்கள் பலர் உயிரிழந்து வருவதாகவும், இந்நிலையில் தமக்கு விரைவில் தீர்வை பெற்றுத் தர சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.