பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானம், இன்று (01) காலை 200 பயணிகளுடன் இலங்கையை வந்தடைந்தது.

பிரான்சின் பரிஸில் உள்ள சார்ல்ஸ் டி கௌல விமான நிலையத்திலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான யூஎல் 564,  அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்தது.

கொழும்பில் இருந்து பரிஸ் சென்ற முதல் விமானம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (31) காலை பரிஸ் நகரைச் சென்றடைந்தது.

அந்த விமானத்தில் பயணித்த, சுற்றுலா மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே தலைமையிலான இலங்கை தூதுக்குழுவை பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்துடன் பரிஸில் உள்ள இலங்கை சமூகம் வரவேற்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் பிரான்சின் சார்ல்ஸ் டி கௌல விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையே ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எயார் பஸ் ஏ330-300 விமானங்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் 2015ஆம் ஆண்டு இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.