இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் ஆளுநர் ராஜித கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (03) நிராகரித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எந்தவொரு சட்ட அடிப்படையும் இன்றித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் செய்த ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 35ஆவது பிரிவின் கீழ் அவரது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆட்சேபனை தெரிவித்தார்.

தென் மாகாண முன்னாள் ஆளுநர் ராஜித கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த மனுவில், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம்.ஜே.வை.பி. பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முறையான கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்த போதிலும் இதுவரை அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.