வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாடு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகின்ற COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி, செவ்வாய்க்கிழமை (02) மேற்கண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கை மற்றும் பஹரேன் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதிக்கும் பஹரேன் இளவரசரும் பிரதமருமான சல்மான் பீன் ஹமாட் கலீபாவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்குப் பதிலாக தொழில் திறன்களையுடைய இலங்கையர்களுக்கு பஹரேன் நாட்டில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில், வாரத்தில் நான்கு நாட்களுக்கு ஸ்ரீ லங்கன் விமானச் சேவை மேற்கொள்ளப்படுகிறது. அந்த விமானப் பயண எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளின் மேம்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதிக்கும் நேபாளப் பிரதமர் பகதூர் தெவ்பாவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரிஷியா ஸ்கொட்லாண்ட்க்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று, கிளாஸ்கோவின் மேர்சன்ட் மாளிகையில் இடம்பெற்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, ஜனாதிபதியிடம் பெட்ரிஷியா அம்மையார்  தெரிவித்தார்