தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக துறைமுகங்கள், மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், கொழும்பில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்த அதேவேளை, கல்வியாளர்களை குரோதப்படுத்துவதையும் மாணவர்களை சிரமப்படுத்துவதையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரி பெற்றோர்களும் நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் (03) போராட்டம் நடத்தினர்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராகவும் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கும் எதிராகவே பல தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை பிரதான களஞ்சியசாலைக்கு முன்பாக தமது படையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியதாக எண்ணெய், துறைமுகங்கள் மற்றும் மின்சாரம் தொடர்பான கூட்டுப் படையின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.

அத்துடன்,  இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பும் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கான் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களும் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க விரும்பவில்லை என்றும் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி கல்வி கற்பிக்க பணம் இல்லை என்றும் தெரிவித்த பெற்றோர், கல்வியாளர்களை மேலும் குரோதப்படுத்துவதையும் மாணவர்களை சிரமப்படுத்துவதையும் அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவத்ததாவது,

அரசாங்கம் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பிரிக்க முயன்றது, ஆனால் இன்று நாங்கள் அவர்கள் தவறு என்று நிரூபித்துள்ளோம். எங்களின் உரிமைக்காக நாங்கள் ஒன்றிணைந்து போராடினோம். இனியும் தாமதிக்காமல் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

நேற்று, ஆசிரியர் பிரச்னை குறித்து பிரதமர் பேசியதை பார்த்தோம், ஆனால் அவர் தீர்வு தரவில்லை. நிதியை கையாளும் போது மிகவும் புத்திசாலி என்று கூறும் பசில் ராஜபக்ஷ, அவரை சந்திக்கவோ, பேசவோ கூட எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவர் தன்னை புத்திசாலி என்று கூறிக்கொண்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது இப்போது தெளிவாகிறது”என்றார்.