ஓய்வூதிய கொடுப்பனவிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாதாந்தம் அறவிட்டு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த காப்புறுதி திட்டத்திற்கான பணத்தை அறவிடும் செயற்பாடுகள் கடந்த முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து 600 ரூபாவும் 70 வயதிற்கு உட்பட்டவர்களிடமிருந்து 400 ரூபாவும் மாதாந்த தவணைக் கட்டணமாக அறவிடப்பட்டது.

இந்த காப்புறுதி திட்டத்தை விரும்பாத, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்பாகவிருந்து ஓய்வூதியத்தை பெறுபவர்கள், ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் 2 வாரங்களுக்குள் தமது நிலைப்பாட்டை ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்துமூலம் அறிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் நிலைப்பாட்டை அறிவிக்காவிடின், இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகக் கருதி ஓய்வூதியக் கொடுப்பனவிலிருந்து பணம் அறவிடப்படுமென பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களின் பின்னர் அனுப்பப்படும் விருப்பமின்மை தொடர்பான கடிதங்கள் செல்லுபடியாகாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக அரசாங்க ஊழியர்களுக்காக செயற்படுத்தப்பட்ட அக்ரஹார காப்புறுதித் திட்டம் விஸ்தரிக்கப்பட்டு, ஓய்வூதியதாரர்களுக்கான சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.