அலட்சிய நடத்தை’ காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் இழப்பு ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.160 கோடி) வழங்குமாறு கோரி, சீனாவின் சேதன உர உற்பத்தியாளரான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குறூப் கம்பனியானது, தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட உர மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சில பக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அதில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமது நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட சேதன உர மாதிரிகளில் எர்வினியா கலந்திருப்பதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் பொய்யானவை என தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ. ஏ.ஆர்.ரி.விக்கிரமாராச்சிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மூன்று நாட்களுக்குள் தமக்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நிறுவனம் அடுத்த சட்ட நடவடிக்கையை தொடரும் என்றும் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் இருந்து மேற்குறிப்பிடப்பட்ட உரத்தை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று இலங்கையின் பேருவளை கடற்பரப்புக்கு அண்மையாக கொழும்பு துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தகவல்களின் அடிப்படையில் அறிய முடிகிறது.

சர்வதேச கடல்சார் சட்டத்தின் “அப்பாவி வழி” விதிகளின் கீழ், இலங்கைக்கு அனுப்பப்பட்ட 20,000 மெற்றிக் தொன் உரத்துடன், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தின் கடற்பரப்பில் கப்பல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என, .இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.