காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவின் மயிலன் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (10) காலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஜயதர்மா கேதீஸ்வரன் உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவிக்கான வெற்றிடத்திற்கு குறித்த தெரிவு இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆ. விஜயராசாவின் பெயரும் சுயேட்சை குழு சார்பில் மயிலன் அப்புத்துரையின் பெயரும் முன்மொழியப்பட்டன.

உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதனையடுத்து, மயிலன் அப்புத்துரைக்கு ஆதரவாக 5 வாக்குகளும் ஆ. விஜயராசாவுக்கு ஆதரவாக 3 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்த நிலையில் காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயிலன் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டார்.