தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்திய இலங்கை மக்களுக்கிடையிலான தொடர்பாடல், இராமேஸ்வரம் படகுச் சேவை, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

13 ஆவது திருத்தம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதுடன், தமக்கென இருக்கும் ஒரே ஒரு திருத்தம் இதுவென்பதால் இதனை விட்டுவிட முடியாது என்பதை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூட்டமைப்பினர் எடுத்துக்கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன.