கிளிநொச்சி  மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கோரி இன்று (15) பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டியும் இனியும் இப்படியானதொரு சம்பவம் இடம்பெறாதிருக்க வலியுறுத்தியும் பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்கள், ஆசிரியர்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கறுப்பு கொடிகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கவனயீர்பில் ஈடுபட்டனர்.

இன்று (15) காலை வவுனியாவிலிருந்து யாழ். நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று குறித்த பாதசாரி கடவைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லொறிகள் மீது மோதியது.

இதன்போது பாதசாரி கடவையை கடந்து சென்ற மாணவிகள் மீது லொறிகள் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 17 வயதான மாணவி உயிரிழந்ததுடன், காயமடைந்த மற்றுமொரு மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.