சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத்
தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப்
பேச்சாளருமான உதய கம்மன்பில ஆனால், அமைச்சரவை சந்திப்பில் இது குறித்து
கலந்துரையாடப்பட்டது என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து
அமைச்சர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள் எனத் தெரிவித்த அவர், கடன் பெறுவது
குறித்து இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.

இதேவேளை, இதன்போது 13ஆவது திருத்தத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து நீக்குவது
குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்த விடயம்
தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழு இதற்காக
உருவாக்கப்பட்டுள்ளது. அது குறித்து அந்த குழு ஆராய்ந்து வருகிறது.

இதற்கான கால எல்லை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தக்குழுவுக்கு தலைவராக அமைச்சர் தினேஸ் குணவர்தன செயற்படுகிறார். எனவே 13ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்றார்.

2017ஆம் ஆண்டு இலக்கம் 17கடந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள்
திருத்தச்சட்டமானது செயலற்றதாகியுள்ளது. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் முழுமை பெறவில்லை என்பதால், அதனை முதலில் நடைமுறைபடுத்த வேண்டும். இல்லையேல் புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றார்.