புதிய அரசியலமைப்பின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும்
உள்நோக்கம் அரசாங்கத்துக்கு இருப்பதாக தெரிவித்த தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், அவ்வாறான
நோக்கங்கொண்ட புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகள் கைவிடப்பட
வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16) விவாதத்தில்
கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இறுதி யுத்தக் காலத்தில்
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பெருமளவு நட்டஈட்டை வரவு-
செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு
நட்டஈட்டை வழங்கதான் வேண்டும். ஆனால் ஆயிரம் ரூபாயை கொடுப்பதால்
அவர்களின் துயரங்கள் தீராது என்றார்.

இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்வா கொள்கைக்கு
ஆதரவானவர்களாக அரசாங்கம் தன்னை காட்டிக்கொள்ள முயற்சித்து,
இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க
அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள்
ஆரம்பத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், நாடு யுத்தத்தை நோக்கி
சென்றிருக்காது.

தமிழ் மக்களை எப்போதும் இரண்டாந்தர பிரஜைகளாக
வைத்திருக்க வேண்டும். உங்களின் தீராத ஆசையால் நீங்கள் சாதித்தது என்ன?
அவர் கேள்வி எழுப்பினார்.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி தொடர்பில் நாட்டின் நீதி
அமைச்சருக்கே தெரியவில்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேசி வரும்
அரசாங்கம், இந்த செயலணியையும் உருவாக்கியுள்ளது. இதனூடாக அரசாங்கம்
எதனை சொல்ல வருகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை தோற்று விக்கின்றன.
அரசியல் யாப்பின் ஊடாக தமிழர்களுக்கு கிடைத்த ஓரளவு பாதுகாப்பையும்
கடந்தகாலங்களில் இல்லாமலாக்கப்பட்டிருந்தது. அப்படியான

உள்நோக்கத்துடனே உங்களது செயற்பாடுகள் இருப்பதாக சந்தேகம்
தோன்றுகிறது என்றார்.

ஓரளவாகவேனும் தமிழர்களும் அதிகாரத்தில் பங்குப்பற்றும் வாய்ப்பை 13ஆவது
திருத்தச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதனையும் இல்லாதொழிக்க தற்போதைய
அரசாங்கம் முயற்சிக்கிறது. புதிய அரசியலமைப்பின் உள்நோக்கமா? எனவும்
அவர் கேள்வி எழுப்பினார்.