லண்டனின் தென்கிழக்கு பகுதியில் Bexleyheath நகரில் ஹெமில்டன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பரவிய தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் நால்வரும் திருகோணமலை – உவர்மலையை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

ஹெமில்டன் வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர், அனர்த்தத்தை எதிர்நோக்கிய ஐவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றரை வயதான ஷஸ்னா, 4 வயதான தபிஷ், இவர்களின் தாயார் நிரூபா மற்றும் அவரது மாமியார் ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

நிரூபாவின் மாமி, தனது பேரப்பிள்ளைகளை பார்ப்பதற்காக இலங்கையிலிருந்து சென்றுள்ளதுடன் அன்றைய தினம் மீண்டும் நாடு திரும்பவிருந்த நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நிரூபாவின் கணவர் தீ பரவிய போது வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metropolitan பொலிஸாரும் தடயவியல் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நிரூபாவின் குடும்பத்தினர் சுமார் 15 வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருவதுடன் 03 மாதங்களுக்கு முன்னரே குறித்த வீட்டில் குடியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.